Thursday, April 25, 2013

பார்வை பறிபோன இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை நிதியுதவி வழங்கல்





பார்வை பறிபோன இளைஞருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தூத்துக்குடி ஆன்லைன் நண்பர்கள் வட்டம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். தச்சுத்தொழிலாளியான இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவரது மகன் இசக்கிமுத்து (18). இவருக்கு கடந்த 10வயதில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவரின் தவறான சிகிச்சையால் இசக்கிமுத்துவுக்கு முடிஉதிர்வு, பல் விழுந்து, இரு கண் பார்வையும் பறி போனது. இதனால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் போனது. 

இதனையடுத்து, சிகிச்சையளித்த மருத்துவரிடம் போய் கேட்டபோது அதற்கு அவர், உயிர்பிழைத்ததே பெரிய விஷயம் என்று கூறி தன் தவறை மறைத்தார். கண் பார்வை பறிபோன இசக்கிமுத்து குடும்பத்தினர் மீண்டும் அவருக்கு பார்வை கிடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக பல கண் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். ஆனால் இசக்கிமுத்துவுக்கு 18 வயதில் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று சென்னையைச் சேர்ந்த சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அதன்படி, தற்போது இசக்கிமுத்துவுக்கு 18 வயது நிரம்பியுள்ளதால் சிகிச்சையளிக்க சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை முன்வந்துள்ளது. ஆனால் இந்த உயர் தர கண் அறுவை சிகிச்சைக்கு மருந்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இசக்கிமுத்துவின் குடும்பத்தினரால் போதிய பணம் திரட்ட முடியவில்லை. இதனையறிந்த தூத்துக்குடி ஆன்லைன் நண்பர்கள் வட்டம் சார்பில் நிதி திரட்டப்பட்டது. 

திரட்டப்பட்ட நிதியை இசக்கிமுத்து மற்றும் அவரது தாயார் மல்லிகா ஆகியோரிடம் ரூ20 ஆயிரம் ரொக்கப் பணத்தை நிலா ப்ராப்பர்ட்டீஸ் இசக்கிராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் பேச்சிமுத்து, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி சிட்டி லயன்ஸ் நிர்வாகி கங்கா ரமேஷ், குமார்,  சூர்யா, முருகன், குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.