Sunday, December 7, 2014

ஸ்டெர்லைட் மகளிர் மேம்பாட்டு புதிய‌ திட்டம் சகி துவக்கம்




தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சகி துவக்க விழா இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2005ம் ஆண்டிலிருந்து தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், 1400 குழுக்களை சேர்ந்த 19ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

தற்போது இந்த திட்டம்  "சகி" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகி என்றால் தமிழில் தோழி என்று அர்த்தம். இந்த திட்டம் பெண்களுக்கு தோழியாக திகழுகிறது. தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் இன்று காலை இதன் தொடக்க விழா நடைபெற்றது. தூர்தர்ஷன் கோவை, இயக்குநர் ஆண்டாள் பிரியதர்ஷினி இத்திட்டத்தை தொடங்கி வைத்து சிறந்த தொழில் முனைவோருக்கான பரிசுகளை வழங்கினார்.

வேதாந்தா குழும தகவல் தொடர்பு மற்றும் சமுதாய வளர்ச்சித் துறை தலைவர் ரோமா பல்வானி இத்திட்டத்தில் உள்ள பங்காளர்களை கௌரவித்து பரிசுகளை வழங்கினார். மனித வளத்துறை தலைவர் ராஜேஷ் பத்மநாபன், மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற்ற சிறந்த தொழில் முனைவோருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். வழக்கறிஞர் சொர்ணலதா வாழ்த்துரை வழங்கினார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுய உதவிக்குழுவின‌ர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் முதனமை செயல் அலுவலர் ராம்நாத், பொதுமேலாளர் சுமதி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இயக்குநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.





 







மீனவர்கள் எல்லை தாண்டினால் எச்சரிக்கும் மென்பொருள் வல்லுனர் அசத்தல்..!


நடுக்கடலில் எல்லை தெரியாமல் தடுமாறும் மீனவர்களுக்கு எல்லை தாண்டாமல் இருக்க செல்போனே எச்சரிக்கை செய்யும் விதமாக புதிய அண்ட்ராய்டு அப்பளிகேசனை தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் வடிவமைத்துள்ளார்.

தமிழக மற்றும் இலங்கைக்கு இடையேயான கடல் பகுதி சுமார் 1,100 கி.மீ. தொலைவு உள்ளது. மேலும் கடல் எல்லை என்பது ஒரே நேர்கோட்டில் இல்லாமல் கைகளின் ரேகைகள் போல வளைந்தும் நெளிந்துமாய் உள்ளது. இதில் இந்திய கடல் எல்லை எங்குள்ளது? சர்வதேச கடல் எல்லை எங்குள்ளது? இலங்கை கடல் எல்லை எங்குள்ளது? என்பதை கண்டறிவதில் மீனவர்களுக்கு எழும் பிரச்சனையினால் தான் எல்லை தாண்டி சென்று இலங்கையிடம் சிக்கி கொள்கின்றனர்.

அவர்களுக்கு கடல் எல்லைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கும் விதமாகவும், எல்லை தாண்டும் நேரத்தில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் ஒரு கருவி இல்லாமல் இருந்து வந்தது. இந்த குறையை நீக்கும் விதமாகவும் எல்லை தாண்டும் மீனவர்களை எச்சரித்து உடனடியாக நமது எல்லைக்குள் திரும்ப வைக்கும் விதமாகவும் ஸ்மார்ட் போனில் இயங்கும் ஒரு புதிய அண்ட்ராய்டு அப்ளிகேசனை தயாரித்துள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்.

தூத்துக்குடி பெறைரா தெருவை சேர்ந்தவர் ரெசிங்டன்(40). எலக்ட்ரானிக்கல் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடியில் சாப்ட்வேர் டெவலெப்மென்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் தான் தற்போது எல்லை தாண்டும் மீனவர்களுக்கு உதவும் விதத்தில் புதிய அண்ட்ராய்டு அப்பளிகேசன்-ஐ வடிவமைத்துள்ளார்.

இந்த அப்ளிகேசனை நமது அண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதுமானது. இதற்காக எவ்வித செலவும் செய்ய தேவையில்லை. தற்போது பலரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் இந்த அப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வது குறித்து யாருக்கும் வகுப்பெடுக்க தேவையில்லை. 

இந்த  அண்ட்ராய்டு அப்ஸ் அறிமுக விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடந்தது. இது குறித்து ரெசிங்டன் கூறுகையில், இந்த அப்ளிகேசன் தமிழக மீனவர்களுக்கு எளிதாக புரியும் விதமாக தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கமாண்ட்கள் அனைத்துமே தமிழில் உள்ளன. இதில் முழுக்க முழுக்க கடல் எல்லைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லையை தாண்டும் போது இது சப்தமிட்டு மீனவர்களை எச்சரிக்கை செய்துவிடும். 

தமிழே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இது எல்லைகளை வெவ்வேறு நிறங்களில் டிஸ்பிளே செய்து காட்டி எச்சரிக்கை செய்துவிடும். இதனை இன்ஸ்டால் செய்ய மட்டுமே இன்டர்நெட் இணைப்பு தேவை. செல்போன் சிக்னலே கிடைக்காத பகுதியிலும் ஆப்லைனில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்ஓஆர் அதாவது சேவ் அவர் ரேய்ஸ் (எங்கள் இனத்தை காப்பாற்று) என்ற பெயரில் இது நடைமுறைக்கு வருகிறது.

மேலும் எல்லைகளை காட்டும் பல ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகளில் மேப்கள் இணைக்கபடவில்லை. இருப்பினும் நடைமுறையில் அவை எல்லைகளை காட்டுவது அட்சரேகை, தீர்க்கரேகை என்ற அடிப்படையிலேயே காட்டுகின்றன. இது சாமானியர்களுக்கு புரியாததாலேயே ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகள் இருந்தும் எல்லை கடந்து செல்ல நேரிடுகிறது. செல்போனில் வெறும் 2.6 மெகா பைட் அளவே கொண்ட இந்த அண்ட்ராய்டு அப்ளிகேசன் மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதுடன் உயிர்காக்கும் நண்பனாகவும் இருக்கும்  என்றார்.

விரைவில் பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஐஓஎஸ்(ஐபோன்கள்), சிம்பெய்ன், ஜாவா, ப்ரோபிரையாரிட்டி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இயங்கும் செல்போன்களிலும் செயல்படும் விதமாக மாற்றப்பட இருக்கிறது. என்றார். பேட்டியின் போது டெக்னிக்கல் ஆர்த்ரோப்ட்ஸ் விஸ்வநாதன், ஜுவேனா கோல்டீ  ஆகியோர் உடனிருந்தனர்.


 



 



Saturday, December 6, 2014

ஹோம் மேட் கேக் வியாபாரம் : இளம் பெண் அசத்தல்


ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தாங்கள் விரும்பும் பொருளை ஆன்லைனில் பார்த்து அதை ஆர்டர் செய்தவுடன் வீட்டிற்கே வந்து கொடுக்கிறார்கள் என்பதால் தான். இந்த ஆன்லைன் வர்த்தகம் இன்னொரு பக்கம் வேலை வாய்ப்புகளை அதிகளவில் தருகிறது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

தூத்துக்குடியில் விண்வெளி கல்வி பயின்ற இளம் பெண் ஒருவர் வீட்டிலிருந்தே பல்வேறு வகையான பொருட்களை மக்கள் விரும்பும் வண்ணம் தயார் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து அசத்தி வருகிறார். வித விதமான கேக் வகைகள், பெண்களுக்கான நவநாகரீக நகைகள், குழந்தைகளுக்கான டையபர் கேக் உள்ளிட்டவைகளை புதுமையாகவும் நவீன முறைகளில் வடிவமைத்து செய்து தருகிறார்.

தூத்துக்குடி தொழிலதிபர் கணபதி சந்தாண‌ம். இவர் டூவிபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய இளைய மகள் சிவரஞ்சனி விண்வெளி கல்வி முடித்து விட்டு வீட்டில் தாயாருக்கு துணையாக இருந்து வருகிறார். சமையல் துறையில் ஆர்வமுள்ள சிவரஞ்சனிக்கு புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது சிறு வயது முதலே இருந்துள்ளது. உடன் படித்த சக மாணவிகளின் ஊக்கத்தின் காரனமாக கேக் தயார் செய்யும் முறையினை கற்றுள்ளார்.

தற்போதுள்ள கால கட்டத்திற்கு தகுந்தவாறு கம்யூட்டர் மூலம் வடிவமைத்து வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கேக் தயார் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். விளம்பரம் இல்லாமல் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் செய்த விற்பனை தற்போது, மும்பை, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொரியர் மூலம் அனுப்பி தனது கேக் வியாபாரத்தை பெருக்கியுள்ளார். இவர் தயார் செய்த கேக் மற்றும் வடிவமைப்பை கண்ட பெண்கள் தாங்களுக்கும் பயிற்சி தருமாறு கேட்டுள்ளனர். இதனையடுத்து மற்ற பெண்களுக்கும் வகுப்புகள் நடத்தி வருகிறார்.

குறிப்பாக பிறந்த குழந்தைகளை பார்க்கச் செல்லும் போது அவர்களுக்கு கேக் வழங்க முடியாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பாம்பினோ டயபர் கேக் என்ற பெயரில், பூத்துண்டு, டயபர், பூட்டீஸ், வாஷ் கிளாத்ஸ், ஹூட்டடு டவல்ஸ், ஷாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கேக் வடிவத்தில் மிக அழகாக தயார் செய்து கொடுக்கிறார்.

இதுகுறித்து சிவரஞ்சனி கூறுகையில், ஆரம்பத்தில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது சிறு வயது முதலே எனக்கு ஆசை. குறிப்பாக வீட்டிலுள்ள பெரியவர்கள் சமையல் செய்யும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன். என்னுடன் படித்த தோழிகள் மூலம் கேக் தயார் செய்வது குறித்து கற்றுக்கொண்டேன். கேக் தயார் செய்வதில் பேக்கரி பொருட்களை தவிர்த்து வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் சீனி, மைதா, வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டே தயார் செய்கிறேன்.

கடைகளில் விற்கப்படும் கேக் வகைகள் ஒரே மாதிரியாக இருக்கும். நான் செய்யும் கேக் வகைகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களில் செய்து தருகிறேன். இதற்காக பிரத்யேகமாக என்னுடை வடிவமைப்பில் உருவான முகநூல் இணையதளத்தில் https://www.facebook.com/amatocooking மாடல்கள் வைத்துள்ளேன்.  அதைப்பார்த்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்கின்றனர். 

மேலும், அவர்கள் விரும்பும் டிசைன்களிலும், பொருளாதார வசதிக்கேற்ப‌ செய்து கொடுக்கிறேன். கடைகளில் விற்கப்படும் கேக் வகைகளை விட என்னுடைய தயாரிப்பு சற்று விலை அதிகமாக இருக்கும். அதற்கான காரணம், துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிலுருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சில உணவு பொருட்கள் கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தயார் செய்யப்படும் கேக் வகைகள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிரவுனி, ஜிஞ்சர், பிரட் குக்கி, ரம் கலந்த புரூட் கேக் உள்ளிட்ட புதியவகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி அல்வாவை பயன்படுத்தி புதிய வகையான கேக்குகள் தயார் செய்யப்படும் என்றார் சிவரஞ்சனி.