Monday, May 11, 2015

ஜெ. விடுதலை: தூத்துக்குடியில் அதிமுகவினர் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்

»


சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.  இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 
தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம் அருகே மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் அதிமுகவினர் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், டாக் ராஜா, ஏபிஆர் கவியரசு, திருச்சிற்றம்பலம், முருகன், குருத்தாய், உதயசூரியன், ரமேஷ்கிருஷ்ணன், ரமேஷ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் அவர்கள் பூக்களை தூவியும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோன்று நகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஜெ. விடுதலையை கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி ஒன்றிய விவசாயிகள் அணி செயலளார் விபிஆர் சுரேஷ் மொட்டை அடித்துக்கொண்டார். அவர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தாடி வளர்த்து வந்தாராம். ஜெயலலிதா விடுதலைக்காக அவர் விரதம் இருந்துவந்த அவர் இன்று தீர்பப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் இன்று மொட்டையடித்து தனது விரதத்தை முடித்துக்கொண்டார். 

திமுக சூழ்ச்சி வழக்கில் இருந்து விடுதலை : இறைவன் அளித்த வரம் - ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை

திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில் விடுதலையானது  இறைவன் அளித்த வரம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால்  வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.  என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது.  என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத்  துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது.  புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு,  இறைவன் அளித்த வரம் இது. இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.  நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம்.  ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும்.
திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது  போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது.  இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது. என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற  காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.  நேற்று (10.5.2015) கூட  நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள்.  இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று  கொண்டாடி இருக்கலாம். தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற  வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும்.  தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன். என்று அந்த அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.