Wednesday, December 12, 2018

தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் இல்லத்திருமண விழா



தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் குமாரவேல் இல்லத்திருமண விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளரும், டூட்டிஆன்லைன் செய்தியாளருமான குமாரவேல் பேத்தியும், கலைஞானபுரம் முருகன் லதா தம்பதியின் மகளுமான கார்த்திகாவிற்கும் கீழக்கரை சந்திரபோஸ் பாண்டியம்மாள் தம்பதியின் மகன் முத்துக்குமாருக்கும் இன்று காலை 6 மணியளவில் தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

திருமணத்தை சண்முகம் பட்டர் நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களுக்கு தூத்துக்குடி பங்களா தெருவிலுள்ள விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்றார் உறவினர்கள் தொழிலதிபர்கள், அரசியல்கட்சியினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு வந்த அனைவரையும் மூத்த பத்திரிகையாளர் குமாரவேல் வரவேற்று உபசரித்தார்.. 

Saturday, July 14, 2018

சிறந்த தமிழ்நாடு சிதைகிறது!



சிறந்த தமிழ்நாடு சிதைகிறது!ஜெய்ராம் ரமேஷ் உரை

காங்கிரசின் அறிவுஜீவிகள் பிரிவு என்று பொதுவாக அழைக்கப்படும் புரொஃபஷனல் காங்கிரசின் தமிழ்நாடு கிளை சார்பில், ‘முன்னேற்றத்துக்கான தமிழ்நாடு மாடல்’ என்ற தலைப்பில் நேற்று (ஜூலை 13) சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
காங்கேயம் காளை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயன் சிவசேனாபதி, சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கரத்தில் முன்னாள் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் விரிவான நிறைவுரை ஆற்றினார்.
அழகான ஆங்கிலத்தில் அமைந்த வளமான அவரது உரை இன்றைய அரசியல்வாதிகளுக்கும், அரசியலில் புழங்கும் புதியவர்களுக்கும் ஒரு பாடத் திட்டம் போலவே அமைந்திருந்தது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகொள்ளாத நிலையில் தமிழ்நாட்டின் இப்போதைய நிலை பற்றி ஜெய்ராம் ரமேஷின் உரையை அப்படியே வாசகர்களுக்குத் தருகிறது மின்னம்பலம்.
இதோ உங்களுடன் ஜெய்ராம் ரமேஷ்வெற்றிகரமான தமிழ்நாடு மாடல்!

நான் மூன்று மாடல் அரசுகளைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். கேரளா மாடல் என்பது உயர்ந்த சமூக வளர்ச்சி, குறைந்த தொழில் வளர்ச்சி. குஜராத் மாடல் என்பது உயர்ந்த தொழில் வளர்ச்சி, குறைந்த சமூக வளர்ச்சி, தமிழ்நாடு மாடல் என்பது உயர்ந்த தொழில் வளர்ச்சி, உயர்ந்த சமூக வளர்ச்சி.

இதை நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வருகிறேன். குறிப்பாக 2014ஆம் ஆண்டு மோடி குஜராத் மாடல் என்று பிரசாரம் செய்யத் தொடங்கியபோது இதை நான் அழுத்தமாகக் குறிப்பிட்டேன். அப்போது அமித் ஷாவுடன் நான் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டேன்.

அப்போது, ‘குஜராத் மாடலை விட்டுவிடுங்கள். தமிழ்நாடு மாடலை பின்பற்றுங்கள்’ என்று அவரிடம் நேரடியாகவே குறிப்பிட்டேன். நகரமயமாதல், தொழில்மயமாதல் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் சிறந்த கல்வி, சிறந்த சுகாதாரம், சிறந்த ஊட்டச்சத்து, பெண்கள் முன்னேற்றம் எல்லாம் தமிழகத்தில் உள்ளன.

பிகார், உத்தரப் பிரதேச மாடல்களும் இந்தியாவில் உள்ளன. அது என்னவென்றால் குறைவான தொழில் வளர்ச்சி, குறைவான சமூக வளர்ச்சி.

ஆக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொழில் வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் இணைந்து முன்னேறியிருக்கின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாடு மாடல் ஒன்றுதான் இத்தகைய சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கிறது. தமிழக மக்கள் உண்மையிலேயே இதற்காக பெருமைப்பட வேண்டும். இதற்குக் காரணம் தமிழகத்தின் அரசியல், வளர்ச்சியை மையப்படுத்தியதாக இருக்கிறது.

வித்திட்ட காமராஜர், வளர்த்த திராவிட அரசுகள்!

தமிழ்நாட்டின் இந்தத் தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்கான அடிப்படை, காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். காமராஜருக்குப் பிறகு 1967 முதல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இருக்கிறது.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர்கள் எல்லாருமே காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கட்டி எழுப்பினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இதுபற்றியும் நாம் பேச வேண்டும். திட்டங்களின் பெயர்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கலாம். ஆனால் அவை அத்தனையும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றன என்பதை நாம் மறுக்க முடியாது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான அடித்தளம் 1950இல் நிறுவப்பட்டது. உணவுப் பாதுகாப்புக்கான அடித்தளம், அனைவருக்கும் கல்விக்கான அடித்தளம், சுகாதாரத்துக்கான அடித்தளம் ஆகியவை 1950களிலும், 60களிலுமே அமைக்கப்பட்டன. அதன் பின் அவை அடுத்தடுத்த ஆட்சிகளால் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டன. எனவே தமிழ்நாடு மாடல்தான் இந்தியாவிலேயே வெற்றிகரமான மாடல்.

ஜப்பான் அரசியலும் தமிழ்நாடு அரசியலும்

உயர்வான தொழில் வளர்ச்சி, உயர்வான சமூக வளர்ச்சி இதைவிட முக்கியம், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் தமிழகம் வளர்ச்சியை நோக்கி சென்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் வளர்ச்சியை நோக்கிச் சென்றது, திமுக ஆட்சியில் இருந்தபோதும், அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் தமிழகம் வளர்ச்சியை நோக்கியே சென்றது. தமிழ்நாட்டு அரசியலை ஒருவகையில் ஜப்பான் அரசியலோடு ஒப்பிடலாம். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மாறலாம். ஆனால் வளர்ச்சி என்றும் மாறாதது.

சிதைவை நோக்கித் தமிழ்நாடு

ஆனால் கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டை நாம் பார்க்கும்போது தமிழ்நாடு சிதைந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. தமிழ்நாட்டின் அரசியல் நிர்வாகம் முற்றிலும் இதைச் சிதைத்துவிட்டது. இன்றைய தமிழகத்தின் முக்கியமான பிரச்சினை தொழில் வளர்ச்சியில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பதல்ல. இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வதில் அரசு முற்றிலும் தோற்றுவிட்டது என்பதே.



சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுற்றுச்சூழல் போராட்டத்துக்காக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் கேள்விப்பட்டதே இல்லை. நாம் சுற்றுச்சூழல் தொடர்பான எத்தனையோ போராட்டங்களை இந்தியாவில் பார்த்திருக்கிறேன். கடைசியாய் கூடங்குளம் போராட்டம் வரை பார்த்திருக்கிறோம். ஆனால், இதுவரை ஒரு போராட்டத்தில்கூட மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் பச்சைப் படுகொலைகளை நான் பார்த்ததில்லை.

இதற்கு நீங்கள் தொழில் வளர்ச்சியையோ சுற்றுச்சூழல் பிரச்னைகளையோ குற்றம் சொல்ல முடியாது. இதுபோன்ற பச்சைப் படுகொலைகளுக்குக் காரணம் தமிழகத்தின் அரசியல் செயல்முறை (political process) தோல்வி அடைந்ததே. இந்த அரசியல் சிதைவைத்தான் நாம் தூத்துக்குடியில் பார்க்கிறோம், சேலம் விமான நிலைய விரிவாக்கத்தில் பார்க்கிறோம், சென்னை- சேலம் எட்டு வழிச் சாலையில் பார்க்கிறோம்.

அரசியல் தோல்வி

இது முழுக்க முழுக்க அரசியல் தோல்வி. மக்களைத் தொடர்புகொள்ளாத, மக்களுடன் கலந்துரையாடல் செய்யாத, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஆட்சி, அரசியல் தலைவர்களின் தோல்வி.இதை அரசாங்கம் மக்களை, மக்களின் பிரச்னைகளை புல்லட் கொண்டு அணுகக் கூடாது, உரையாடல்கள் மூலமாக அணுக வேண்டும்.

நான் சுற்றுச் சூழல் அமைச்சராக 26 மாதங்கள் பணிபுரிந்திருக்கிறேன். இந்த 26 மாதங்களில் எனக்கு 26 வயது கூடுதல் ஆகிவிட்டது. தொழில் துறை மகிழ்ச்சி அடையவில்லை, கார்ப்பரேட்டுகள் மகிழ்ச்சி அடையவில்லை, சுற்றுச்சூழல்வாதிகளும் மகிழ்ச்சி அடையவில்லை.

தமிழ்நாட்டில் இன்று சிதைந்துபோன அரசியல் தோல்விக்கு மாநில அரசுதான் முழுக்க முழுக்க பொறுப்பு. சுற்றுச் சூழல் பிரச்சனைகளைக் கையாள அரசியல் முறையிலான தீர்வை நோக்கிச் செல்வதே ஒரே வழி. ஜனநாயகச் செயல்முறைகளின் மூலமே இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அரசியல் மற்றும் ஜனநாயகக் கதவுகளை அடைத்துவிட்டால் நீங்கள் இந்தப் பிரச்சினைகளை என்றைக்கும் தீர்க்க முடியாது.

திருத்தப்பட்ட சட்டங்கள்

2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய நிலக் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2015ஆம் ஆண்டு அதில் திருத்தம் கொண்டுவந்த முதல் அரசு தமிழ்நாடு அரசு. நிலக் கையகப்படுத்துதலின்போது சமூகப் பாதுகாப்பு, நிலச் சொந்தக்காரர்களின் எழுத்துபூர்வமான ஒப்புதல் ஆகிய ஷரத்துகளைத் திருத்திவிட்டது தமிழக அரசு. அதன் பின் குஜராத் திருத்தியது, ராஜஸ்தான் திருத்தியது, தெலங்கானா திருத்தியது.

2013 நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலம் வழங்குபவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு, நிலம் கொடுப்பவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்த்தலுக்கான ஏற்பாடு, நில உரிமையாளர்களின் எழுத்துபூர்வமான ஒப்புதல் இருந்தால் மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்த முடியும் என்று இருந்தது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் இதையெல்லாம் திருத்திவிட்டது. அதனால் இப்போது நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.
THANKS ;; MINALBALAM

ஸ்டெர்லைட் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை!

ஸ்டெர்லைட் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை!ஸ்டெர்லைட் எவ்வித விதிமீ“ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வித சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறவில்லை. ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகளைச் சந்தித்து வருவதாக துத்துக்குடி வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார் அந்த ஆலையின் சி.இ.ஓ ராம்நாத்.

கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் கடந்த 1ஆம் தேதி செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆலையைச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வாய்ப்பே இல்லை எனவும், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஸ்டெர்லைட் ஆலையின் சி.இ.ஓ ராம்நாத், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகளைச் சந்தித்து வருவதாக தூத்துக்குடி வட்டார மக்கள் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் மக்கள் 250 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு, பணிகளை எல்லாம் மீண்டும் தொடங்க வேண்டும். கிராம மக்களுடனான எங்களது உறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்" என்று கூறினார்.

"எங்களது நிறுவனம் எவ்வித சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறவில்லை. எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று சி.இ.ஓ ராம்நாத் தெரிவித்தார்


THANKS;; MINABALAM

Thursday, January 18, 2018

நேர்மையான அரசியலின் அடையாளம் ஜீவானந்தம்!

ஜீவா
ஜீவா' என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தத்தின் நினைவு நாள் இன்று.
காந்திய கொள்கையைப் பின்பற்றி, பின் பெரியாரோடு களப்பணியாற்றி, இறுதியாக மார்க்சியவாதியானவர் ஜீவானந்தம். 
1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந்தேதி நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள பூதபாண்டியில் பிறந்தவர் ஜீவானந்தம். குலத் தெய்வத்தின் பெயரை ஒட்டி, சொரிமுத்து என்பதே அவரின் இயற்பெயர். பின்னாளில் ஜீவானந்தமானார். தனித்தமிழ் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் தன் பெயரை உயிர் இன்பன் என மாற்றிக்கொண்டார். ஒருமுறை, மறைமலை அடிகளாரை சந்திக்கச் சென்றபோது, வாசல் கதவைத் தட்டினார். அப்போது மறைமலை அடிகளார், உள்ளிருந்தவாறே, 'யாரது, போஸ்ட் மேனா?' என்றாராம். அந்தச் சந்திப்பின்மூலம் தனித்தமிழ் மீதான பிடிப்பு தளர்ந்து மீண்டும் ஜீவானந்தம் என்றே ஆனார்.
சிறுவயதிலிருந்தே காந்தியக் கொள்கை மீது அதீத பற்று கொண்டவர். சிராவயலில் காந்தி ஆசிரமம் ஒன்றையும் நிறுவினார். அங்கு, காந்தி வரவேண்டும் என விரும்பி, வேண்டுகோள் வைத்தார். காந்தியும் மகிழ்ச்சியுடன் வந்தார். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, 'ஜீவானந்தம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?' என்றார் காந்தி. புன்னகையுடன் ஜீவா, 'இந்தத் தேசம்தான் என் சொத்து' என்றார். அதைக் கேட்டு வியப்படைந்த காந்தி, 'இல்லை ஜீவா, நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்து' என்றாராம்.
காங்கிரஸ் மாநாடு ஒன்றில் பெரியாரின் நட்பு கிடைக்க, அவரைப் பின் தொடர்கிறார். அப்போது, பகத்சிங் எழுதிய, 'நான் ஏன் நாத்திகனானேன்' எனும் நூலை தமிழாக்கம் செய்கிறார் ஜீவா. அதற்காக அவரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. சிறையில் கடும் இன்னல்களுக்கு உள்ளானார் ஜீவா.
ஜீவாவின் தனிச் சிறப்பு அவரின் மேடைப் பேச்சு. அவரின் பேச்சைக் கேட்க, பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வருவார்கள். அவரின் பேச்சு இந்திய விடுதலை உணர்வை மக்களிடையே விதைத்தது. இதைக் கவனித்த ஆங்கிலேய அரசு அவரின் பேச்சுக்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோட்டையூரில் அவர் பேசினார். அதனால் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் கம்யூனிஸக் கருத்து கொண்டவர்களின் நட்பு கிடைக்க, அதுபற்றி அதிகம் தெரிந்துகொண்டார். கம்யூனிஸம் பற்றிய நூல்களைத் தொடர்ந்து படித்தார். இந்நிலையில், அவரின் பாதை கம்யூனிஸத்தை நோக்கியதாக மாறியது.
1946-ல் கம்யூனிஸ்ட்டு கட்சி தடைச் செய்யப்பட்டதும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு, 1952-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று, சட்டமன்ற உறுப்பினரானார். அங்கு, தொழிலாளர்களின் பிரச்னைகளை உரக்கப் பேசினார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் பின்னாளில் தொகுக்கப்பட்டு, தனி நூலாக வெளியிடப்பட்டது.
சிங்காரவேலர், வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய ஜீவா, தனது வாழ்நாள் முழுவதும் எளிமையும் நேர்மையும் கொண்டவராக வாழ்ந்தார். அவரின் இறுதி ஆண்டுகளில் சென்னை புற நகரில் குடிசை ஒன்றில் வாழ்ந்தார். அதைப் பார்த்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், ஜீவாவுக்கு ஒரு வீடு ஒதுக்கி தருவதாக கூறியதை அன்போடு மறுத்துவிட்டார்.
ஜீவா மிகச் சிறந்த எழுத்தாளர். கவிஞர். அவர் எழுதிய 122 கவிதைகள் ஒரே நூலாக தற்போது கிடைக்கிறது. இதுதவிர, 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
ஜீவானந்தம் க்கான பட முடிவு