Monday, February 27, 2012

வேளச்சேரி என்கவுண்டர் – காவல் துறையின் நாடகம்

சென்னை – வேளச்சேரி பகுதியில் கடந்த 22.02.2012 அன்று நள்ளிரவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக அபய்குமார், வினய் பிரசாத், வினோத்குமார், ஹரிஷ்குமார், சந்திரிகாராய் ஆகிய 5 நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 23.01.2012 அன்று சென்னை – பெருங்குடி பரோடா வங்கியில் 19 இலட்ச ரொக்கமும், 20.02.2012 அன்று சென்னை- கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 14 இலட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து விபரம் தெரிவித்தால் 1 இலட்சம் பரிசுத் தொகை கிடைக்கும் என்று சென்னை காவல் ஆணையர் திருமிகு.திரிபாதி அவர்கள் 22.02.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுமட்டுமல்லாமல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கருதக்கூடிய மர்மநபரின் அசைகின்ற புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.
velacheri_encounter_400இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கக்கூடிய நபரோடு 4 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வேளச்சேரி பகுதியில் தங்கிருந்ததாகவும் இவர்களை பிடிக்கச் சென்றபோது வீட்டிலிருந்த வங்கிக் கொள்ளையர்கள் போலீசாரை சுட்டதாகவும் அதில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் போலீசார் தற்காப்புக்காக வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 24, 25 பிப்ரவரி 2012 ஆகிய தேதிகளில் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். மோதல் மரணம் நடந்த பகுதிகளில் குடியிருப்பவர்கள், போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
வேளச்சேரி மோதல் மரணம் போலி மோதல் மரணம் என்றே எமது ஆய்வில் தெரிய வருகிறது. தமிழகத்தில் கடந்த 29.05.2006 முதல் 23.02.2012 இன்று வரை போலி மோதல் சாவில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதற்காகவும், வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவும் மோதல் மரணம் நடத்தப்படுகிறது என்று கூறினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மிகக்கொடிய மனித உரிமை மீறலாகும். போலீசாரின் போலி மோதல் மரணத்தால் பல உண்மைகள் சிவில் சமூகத்திற்கு தெரியாமல் போகிற ஆபத்தும் ஏற்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டு குற்றத்திற்கான காரணங்கள், பின்னணி உள்ளிட்ட பல உண்மைகள் சிவில் சமூகத்திற்கு தெரிய வருகிறபோது குற்றத்தை தடுப்பதற்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதை தவிர்த்து உயிரை தற்காத்துக் கொள்வதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் மோதல் மரணம் நடந்ததாக தொடர்ந்து போலீசார் பொய் பரப்புரை செய்து வருவது ஏற்புடையதல்ல.
இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா போலி மோதல்மரணங்களிலும் போலீசார் தங்கள் தரப்பு கருத்துக்களை என்ன கூறி வந்தார்களோ, அதே கருத்துக்களைத்தான் வேளச்சேரி மோதல் மரணத்திலும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மைகள் கண்டுபிடிக்க முடியாமல் – குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கூறிய கருத்துக்களே உண்மையாக பதிவு செய்யப்பட்டு அவை நீதிமன்ற தீர்ப்புகளாக வெளிவருகிறபோது நம்முடைய ஜனநாயகம் மிகப்பெரிய அவலத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த சிக்கல் தொடரக்கூடாது என்கிற அடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு வேளச்சேரி மோதல் மரணத்தின் உண்மைகளை சிவில் சமூகத்திற்கு தெரியப்படுகிறது.
 கடந்த 21.02.2012 மற்றும் 22.02.2012 ஆகிய நாட்களில் வங்கிக் கொள்ளையர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிற வேளச்சேரி வீடு பூட்டியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 வேளச்சேரி பகுதியில் நடந்த மோதல் மரணம் குடியிருப்புக்கு அருகாமையில் 22.02.2012 அன்று இரவு 8.00 மணியளவில் சில போலீசார் சீருடை அணிந்தும், சில போலீசார் சீருடை அணியாமலும் அப்பகுதியில் கண்காணித்து வந்துள்ளனர்.
 கடந்த 22.02.2012 அன்று இரவு 12.00 மணியளவில் காவல் வாகனங்களோடு சில தனியார் வாகனங்களும் உடன் வந்தன என்று ஒருவர் எமது குழுவினரிடம் தெரிவித்தார்.
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் போலீசார் வெளியிட்ட பிறகும் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறக்கூடிய புகைப்படத்தின் நபரும் மற்றவர்களும் எவ்வித பதட்டமும் இல்லாமல் வேளச்சேரியில் தங்கியிருக்க முடியுமா?
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வேளச்சேரியில் தங்கியிருந்ததாக தகவலின் அடிப்படையில் 14 பேர் கொண்ட போலீசார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். தகவல் கொடுத்தவர் உண்மையான தகவலை கொடுத்தாரா? பொய்யான தகவலை கொடுத்தாரா? அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா? தகவலின் அடிப்படையில் மட்டுமே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு அப்பகுதிக்குச் செல்ல முடியுமா? வங்கிக் கொள்ளையர்கள் அங்கே தங்கியிருந்ததாக உறுதிபடுத்தினாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை திரட்டிக்கொண்டு அவர்களை கைது செய்திருக்கலாம். மிகக்கொடிய குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களை பிடிப்பதற்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றிருக்கலாம். அவர்கள் யார்? அவர்கள் பின்னணி? என்பதெல்லாம் எதுவுமே தெரியாமல் அவர்களை மோதலில் சுட்டுக் கொன்றிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
 கடந்த 22.02.2012 அன்று இரவு 11.00 மணியளவில் வேளச்சேரி பகுதியை கண்காணித்துக் கொண்டிருந்த சில போலீசார் விரைவாக அப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும் ஒரு சில போலீசார் மட்டும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த வீடு மிகவும் குறுகலான இடத்தில் உள்ளது. சென்று வருவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்நிலையில் மிகவும் எளிதாக பிடித்திருக்கக்கூடிய இந்த நபர்களை துப்பாக்கியால் சுட்டுதான் பிடித்திருக்க வேண்டுமா?
velacheri_encounter_621
 போலீசாருக்கும் வங்கிக் கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் நடந்திருந்தால் வீட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு தடங்கள் இருந்திருக்கும். 14 பேர் கொண்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களின் இரத்த சிதறல்கள் சுவற்றிலும் பிற பகுதிகளிலும் பதிந்திருக்கும். ஆனால் தரையில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சிந்தியுள்ளது. இது மோதல் நடந்ததற்கான அறிகுறியாகத் தெரியவில்லை. இரத்தம் சிந்திய சடலங்களை கொண்டு வந்து கிடத்தியது போன்றுதான் உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 30 பேர் கொண்ட தனிப்படை இருக்கின்ற நிலையில் ஒரு குறுகிய பகுதியில் தங்கியிருந்ததாக கூறக்கூடிய 5 நபர்களை உயிருடன் பிடிப்பதற்குக்கூட நம்முடைய போலீசாருக்கு திறன் இல்லாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 கடந்த 22.02.2012 அன்று சென்னை காவல் ஆணையர் திரிபாதி கூட்டிய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மேற்குவங்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்கிற கருத்து எப்படி விவாதிக்கப்பட்டது?
 வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய பலரும் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்கவில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஒரு சிலர் சத்தம் கேட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் விடியற்காலை 4.00 மணியளவில் அங்குள்ள மக்களிடம் போலீசார் என்கவுன்டர் நடந்துள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறியுள்ளனர். போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் நடந்தால் துப்பாக்கிச் சத்தம், அலறல் சத்தம், பதட்டம் போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். துப்பாக்கிச் சூடு நடந்த வீடு தனி வீடாக இருந்திருந்தாலும் ஓரளவு போலீசார் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். சாதாரண மக்கள் தங்கியிருக்கக்கூடிய குறுகலான பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் மோதல் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
velacheri_encounter_360 வங்கிக் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்படுகிற காவலர்கள் கிறிஸ்டின் ஜெயசீலன் மற்றும் ரவி ஆகியோர் எப்போது பார்த்தாலும் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றனர். இதெல்லாம் ஒருவிதமான நாடகமாகவே தெரிகிறது. ஆகவே மோதல் மரணத்தில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமல்ல இதுபோன்ற போலி காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 போலி மோதல் மரணம் மட்டுமல்லால் போலி முகவரியை போலீசார் தெரிவித்துள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று போலீசார் வெளியிட்டுள்ள முகவரி போலியானது என்று கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மும்பையில் கொள்ளையடித்தவர்கள், அவர்களுக்கு பெண்களோடு உல்லாசமாக இருந்தவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து புனையப்படுகிற கதை உண்மையல்ல.
 சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக கொல்லப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை போலீசார் செய்யத் தவறிவிட்டனர். இதுபோன்ற மோதல் மரணங்களுக்கு போலீசார் மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது. சில அரசியல் சக்திகளும் காரணங்களாக இருக்கலாம். அவற்றின் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
 5 பேர் மோதல் மரணங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை இயக்குனர் கூறியிருப்பது வரவேற்கக்கூடியதல்ல. சி.பி.சி.ஐ.டி போலீசார் என்பவர்கள் தமிழக போலீசார். இவர்களால் எப்படி உண்மையை வெளிக்கொணர முடியும்? ஆகவே சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டால் உண்மைகள் வெளிவராது.
 கடந்த வாரம் சென்னை போலீசார் 10 ஆயிரம் ரௌடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 25 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மோதல் மரணம் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்ததாக பத்திரிக்கையில் செய்தி வெளிவந்திருந்தது.
 தமிழகத்தில் நாளுக்கு நாள் கொள்ளைச் சம்பவங்களும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு போலீசார் சட்டத்தின் அடிப்படையில் புலனாய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு இத்தகைய குறுக்கு வழியிலான நடவடிக்கை சமூகத்தில் நடக்கக்கூடிய வன்முறையை ஒழித்துவிடாது.
வேளச்சேரி மோதல் மரணம் பலபேருக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிற போலீசாரின் கூற்று ஏற்புடையதல்ல. இம்மோதல் மரணம் நடந்த பிறகுகூட 23.02.2012 இன்று மதுரையிலும் இராமநாதபுரத்திலும் வங்கிக் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக தெரிய வருகிறது. சமீப காலங்களில் மட்டும் வங்கிக் கொள்ளை அதிகளவு நடப்பதற்கான காரணங்கள் என்ன? இதை அரசு ஆய்வு செய்திருக்கிறதா?
 தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய கொலை, கொள்ளை, மின்வெட்டு, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு என்கவுன்டரை நடத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று ஒரு அரசு காட்ட முயற்சித்தால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.
 சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்குள்ளது? இவர்களோடு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் யார்? என்கிற விபரம் போலீசாரால் கண்டுபிடிக்கப்படாமல் போனது துரதிஷ்டவசமானது.
velacheri_encounter_620
 சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டிவிட்டு மற்ற நபர்கள் யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்களையும் சேர்த்தே சுட்டுக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்ற விசாரணை இல்லாமல் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட 5 நபர்கள் மிகக்கொடிய குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்கிற உண்மைகளை பத்திரிக்கைகள் மூலம் வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயங்களை நீதியாக அறிவித்துக் கொண்டிருப்பதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும்.
 சென்னை மாநகர ஆணையர் திரு.திரிபாதி அவர்கள் கடந்த 22.02.2012 மற்றும் 23.02.2012 ஆகிய தேதிகளில் நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு ஒற்றுமை உள்ளது. கடந்த 22.02.2012 அன்று சென்னை மாநகர ஆணையர் திரிபாதி அவர்கள், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர் ஒருவரின் அசைகின்ற புகைப்படத்தை வெளியிட்டு இவர்களை பிடிப்பதற்கு 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சிலர் வடமாநிலங்களுக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். வங்கிக் கொள்ளை பற்றிய தகவல் தெரிவிப்பதற்கு ரூ.1 இலட்சம் ரொக்கமும் பரிசு கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் பற்றிய தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார். மறுநாள் 23.02.2012 அன்று மோதல் மரணத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் குற்றஞ்சாட்டவர்களின் முகவரி, குற்றப் பின்னணி உள்ளிட்ட பல தகவல்ளை வெளியிட்டார். இதற்கிடையே 23.02.2012 அன்று தினத்தந்தி பத்திரிக்கையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, போலீசாருக்கு சவாலாக இருக்கக்கூடிய நபர்கள் எங்களை தூண்டிவிட்டார்கள், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்கிற ரீதியில் பேட்டி கொடுத்துள்ளார். ஆகவே மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கையாளர் கூட்டமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளன. குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட பிறகு தான் 22.02.2012 அன்று பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.
ஆகவே இதனடிப்படையில் சில பரிந்துரைகளை எமது அமைப்பு அரசிற்கு முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
• வேளச்சேரி மோதலில் ஈடுபட்ட போலீசார் மீதும், உயர் அதிகாரி மீதும் 302 இ.த.ச. அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• இம்மோதல் மரணத்தை கோட்டாட்சியர் விசாரணை செய்யாமல், உச்சநீதிமன்றத்தினுடைய கண்காணிப்பில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சி.பி.ஐ. போன்ற போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
• 5 பேர் மோதல் மரணம் சம்பந்தமாக எவரையும் விசாரணை செய்வதற்கு தமிழக போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் சாட்சி அளிப்பவர்களின் வாக்குமூலம் ரகசியம் காக்கப்பட வேண்டும்.
• வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 நபர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுவதனால் ஹிந்தி பேசக்கூடிய பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கு தேசிய அளவில் பிராந்திய விரோதப்போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் அடிப்படையிலும், விஞ்ஞானப் பூர்வ விசாரணையின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குனர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்