Saturday, January 3, 2015

முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயில் இயக்கம்

 


 





தூத்துக்குடி–சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயில் தூத்துக்குடி வந்தது.



விருதுநகர் – தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி – நெல்லை இடையேயான ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நடந்து முடிந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனைகள் நடந்தன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மின்சார பாதைகள் மற்றும் ரயிலின் வேகம், துணை மின்நிலையங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருந்தது. இதனால் மின்மயமாக்கப்பட்ட பாதையில் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.



கடந்த மாதம் 29ம் தேதி மின்சாரம் மூலம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இயக்கபட முடியவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக சென்னையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது.



தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக மாறியது குறித்து ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக உள்ள முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வேகம் அதிகரிக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.