Wednesday, January 22, 2014

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: திமுக வெளிநடப்பு

 


தூத்துக்குடி மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் ஆணையர் மதுமதி, துணை மேயர் சேவியர், பொறியாளர் ராஜகோபாலன், மண்டல தலைவர்கள் வெள்ளப்பாண்டி, கோகிலா, செல்வராஜ், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் சசிகலா புஷ்பா பேசுகையில், தூத்துக்குடி கடலோர பகுதியாகும். இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு மாநகராட்சி கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது என்றார். 

பின்னர் கூட்ட அஜென்டா வாசிக்கப்பட்டபோது, 46வது வார்டு திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் குறுக்கிட்டு, தனது வார்டில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலகம் இன்று வரை திறக்கப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து திமுக கொறடா கோட்டுராஜா பேசுகையில், தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நூலகங்களை திறக்காததைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். 

தொடர்ந்து மேயரைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டவாறு வெளியேறினர். அப்போது மேயருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்க்ள கோஷமிட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் தூத்துக்குடி எம்எல்ஏ நிதி 1.41 கோடி மதிப்பீட்டில் 17 பணிகளை மேற்கொள்வது, மாநகராட்சியில் காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு ஆள்களை நியமிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் ஆடுகளுக்கு ஆயிரம், மாட்டுக்கு ரூ.5ஆயிரம், கன்றுகுட்டிக்கு ரூ.2ஆயிரம் அபாராதம் மற்றும் நாள் ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக ரூ.200 உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும், 2 முறைக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்ட கால்நடைகள் கோசலை வசம் ஒப்படைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



 

No comments:

Post a Comment