Sunday, December 7, 2014

மீனவர்கள் எல்லை தாண்டினால் எச்சரிக்கும் மென்பொருள் வல்லுனர் அசத்தல்..!


நடுக்கடலில் எல்லை தெரியாமல் தடுமாறும் மீனவர்களுக்கு எல்லை தாண்டாமல் இருக்க செல்போனே எச்சரிக்கை செய்யும் விதமாக புதிய அண்ட்ராய்டு அப்பளிகேசனை தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் வடிவமைத்துள்ளார்.

தமிழக மற்றும் இலங்கைக்கு இடையேயான கடல் பகுதி சுமார் 1,100 கி.மீ. தொலைவு உள்ளது. மேலும் கடல் எல்லை என்பது ஒரே நேர்கோட்டில் இல்லாமல் கைகளின் ரேகைகள் போல வளைந்தும் நெளிந்துமாய் உள்ளது. இதில் இந்திய கடல் எல்லை எங்குள்ளது? சர்வதேச கடல் எல்லை எங்குள்ளது? இலங்கை கடல் எல்லை எங்குள்ளது? என்பதை கண்டறிவதில் மீனவர்களுக்கு எழும் பிரச்சனையினால் தான் எல்லை தாண்டி சென்று இலங்கையிடம் சிக்கி கொள்கின்றனர்.

அவர்களுக்கு கடல் எல்லைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கும் விதமாகவும், எல்லை தாண்டும் நேரத்தில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் ஒரு கருவி இல்லாமல் இருந்து வந்தது. இந்த குறையை நீக்கும் விதமாகவும் எல்லை தாண்டும் மீனவர்களை எச்சரித்து உடனடியாக நமது எல்லைக்குள் திரும்ப வைக்கும் விதமாகவும் ஸ்மார்ட் போனில் இயங்கும் ஒரு புதிய அண்ட்ராய்டு அப்ளிகேசனை தயாரித்துள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்.

தூத்துக்குடி பெறைரா தெருவை சேர்ந்தவர் ரெசிங்டன்(40). எலக்ட்ரானிக்கல் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடியில் சாப்ட்வேர் டெவலெப்மென்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் தான் தற்போது எல்லை தாண்டும் மீனவர்களுக்கு உதவும் விதத்தில் புதிய அண்ட்ராய்டு அப்பளிகேசன்-ஐ வடிவமைத்துள்ளார்.

இந்த அப்ளிகேசனை நமது அண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதுமானது. இதற்காக எவ்வித செலவும் செய்ய தேவையில்லை. தற்போது பலரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் இந்த அப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வது குறித்து யாருக்கும் வகுப்பெடுக்க தேவையில்லை. 

இந்த  அண்ட்ராய்டு அப்ஸ் அறிமுக விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடந்தது. இது குறித்து ரெசிங்டன் கூறுகையில், இந்த அப்ளிகேசன் தமிழக மீனவர்களுக்கு எளிதாக புரியும் விதமாக தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கமாண்ட்கள் அனைத்துமே தமிழில் உள்ளன. இதில் முழுக்க முழுக்க கடல் எல்லைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லையை தாண்டும் போது இது சப்தமிட்டு மீனவர்களை எச்சரிக்கை செய்துவிடும். 

தமிழே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இது எல்லைகளை வெவ்வேறு நிறங்களில் டிஸ்பிளே செய்து காட்டி எச்சரிக்கை செய்துவிடும். இதனை இன்ஸ்டால் செய்ய மட்டுமே இன்டர்நெட் இணைப்பு தேவை. செல்போன் சிக்னலே கிடைக்காத பகுதியிலும் ஆப்லைனில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்ஓஆர் அதாவது சேவ் அவர் ரேய்ஸ் (எங்கள் இனத்தை காப்பாற்று) என்ற பெயரில் இது நடைமுறைக்கு வருகிறது.

மேலும் எல்லைகளை காட்டும் பல ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகளில் மேப்கள் இணைக்கபடவில்லை. இருப்பினும் நடைமுறையில் அவை எல்லைகளை காட்டுவது அட்சரேகை, தீர்க்கரேகை என்ற அடிப்படையிலேயே காட்டுகின்றன. இது சாமானியர்களுக்கு புரியாததாலேயே ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகள் இருந்தும் எல்லை கடந்து செல்ல நேரிடுகிறது. செல்போனில் வெறும் 2.6 மெகா பைட் அளவே கொண்ட இந்த அண்ட்ராய்டு அப்ளிகேசன் மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதுடன் உயிர்காக்கும் நண்பனாகவும் இருக்கும்  என்றார்.

விரைவில் பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஐஓஎஸ்(ஐபோன்கள்), சிம்பெய்ன், ஜாவா, ப்ரோபிரையாரிட்டி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இயங்கும் செல்போன்களிலும் செயல்படும் விதமாக மாற்றப்பட இருக்கிறது. என்றார். பேட்டியின் போது டெக்னிக்கல் ஆர்த்ரோப்ட்ஸ் விஸ்வநாதன், ஜுவேனா கோல்டீ  ஆகியோர் உடனிருந்தனர்.


 



 



No comments:

Post a Comment