Thursday, August 22, 2013

தாதுமணல் நிறுவன உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் : ஆயர் இவோன் அம்புரோஸ் பேட்டி


விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளிய நிறுவனங்களின் உரிமையாளர்களை கைது செய்து, அவர்களது சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள ஆயர் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மீன்பிடி தொழில் செய்கிற சமுதாய மக்கள் நிலப்பரப்பு ரீதியாக ஒதுங்கியும், பிறரால் ஒதுக்கப்பட்டும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை மற்றும் வாழ்வாதார உரிமைகள் பல்வேறு வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. 

இம்மக்களின் அறியாமை, மற்றும் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசின் சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறி உதாசீனப்படுத்தி கடற்கரை ஓரங்களில் சில நிறுவனங்கள் தாதுமணல்களை அள்ளுகின்றன. மீன்பிடி தொழில் செய்யும் மக்களின் வாழ்விற்கும், இயற்கை சூழலுக்கும் குந்தகம் விளைவித்து வருகின்றனர். 

மேலும், அந்த கும்பல் தங்களை காப்பாற்றிக்கொள்ள பணத்தினை கொடுத்து அடியாட்களை தூண்டிவிட்டு மீனவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் உருவாக்கி வருகின்றனர். மேலும், கடற்கரையோரங்களில் அள்ளப்படும் மணல்களிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும் போது, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் தோல் வியாதிகள், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கு காரணமாக உள்ளன. அன்மைக் காலங்களில் இவ்வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்ய்பபட்டு வருகின்றன. 

தென்னக கடற்கரையோரங்களில் கடந்த சுமார், 10, 20 ஆணடுகளாக சட்டவிரோதமாக கனிமங்களை சுரண்டி கொள்ளையடிக்கும் கும்பல்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும். 

தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோரங்களில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி எந்த நிறுவனமும் தாது மணல் அள்ளக்கூடாது என்று கடந்த 14.8.2013 பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த ஆவண செய்ய வேண்டும். இனிமேல் கடற்கரைகளில் மணல் அள்ள எவருக்கும் உரிமம் கொடுக்க கூடாது. 

அத்துமீறி தாது மணல் எடுப்பதை கண்டுகொள்ளாமல் கடமை தவறி, மணல் எடுப்பவர்களுக்கு மறைமுகமாக சாதகமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும். 

மணல் அள்ளுபவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, சேமிப்பு கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மெட்ரிக் டன் தாது மணலை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும். தாதுமணல் முறைகேடு குறித்து நியமிக்கப்பட்டுள்ள அரசு குழு அரசியல் தலையீடு இன்றி செயல்பட வேண்டும்.

மீன்வளத்துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துகேட்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுக்ழு அமைத்து விசாரணை நடத்தியது போன்று, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் நடைபெற வேண்டும்.  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள், மறை மாவட்ட குருக்கள், துறவியர் சார்பாக இந்த கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன் என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் மாற்றத்திற்கு பின்னர்தான் இந்த பிரச்சனை பெரிதாக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், தாதுமணல் கொள்ளை தொடர்பாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். நெல்லை மாவட்டம், பெருமணல் கிராமத்தில் நடந்த சம்பவத்தில் குருக்களும், கன்னியாஸ்திரிகளும் தாக்ப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகளும் காவல்துறையால் போடப்பட்டது. தற்போது அரசே குரல் கொடுக்கும் போது நாங்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார். 

சிஎஸ்ஐ பேராயர் ஜெயபால் மணல் நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளாரே? என்று கேட்டபோது, சிலர் ஆயிரம் மக்களை திரட்டிக் கொண்டு அவர்களே கிறிஸ்தவர்களி்ன் பேரைச் சொல்லி சபை நடத்தி வருகிறார்கள். தங்களுக்கு தாங்களே பிஷப் பட்டம் சூட்டிக்கொள்கிறார்கள். ஒருமைப்பட்ட மையம் அமைப்பு அவர்களிடம் இல்லை. 

போப்பாண்டவர் குரலே உலகம் முழுவம் முழங்கும் வகையில் எங்களது கத்தோலிக்க அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மக்களின் உண்மையான நலனி்ல் அக்கறையோடு போராடி வருகிறோம் என்று தெரிவித்தார். பேட்டியின் போது, மறை மாவட்ட முதன்மை குரு செல்வராஜ், மீனவர் அமைப்புகளின் செயலாளர் பங்குதந்தை லெரின் டீரோஸ் ஆகியோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment